லாரி டிரைவரை அடித்துக் கொன்று உடலை எரிக்க முயற்சி


லாரி டிரைவரை அடித்துக் கொன்று உடலை எரிக்க முயற்சி
x
தினத்தந்தி 26 March 2018 4:15 AM IST (Updated: 26 March 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே லாரி டிரைவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்து விட்டு, அவரது உடலை தீ வைத்து எரிக்க முயன்ற கிளனரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம், வெற்றிலைத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான குடோன்கள் இயங்கி வருகின்றன. இதில் கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் பேட்டரிகள் வைக்கும் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றும் உள்ளது.

இந்த குடோனுக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் வந்தது. லாரியை கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த டிரைவர் ரவீந்திர நடேகர்(வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளனர் சந்தோஷ்(35) என்பவர் உடன் வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு பேட்டரிகளை லாரியில் இருந்து இறக்கி குடோனில் வைக்கும் பணியில் கிளினீர் சந்தோஷ் ஈடுபட்டார். ஆனால் பேட்டரிகள் அதிக அளவில் இருந்ததால் அதனை முழுவதும் இறக்கி வைக்க முடியாமல் களைத்து போனார்.

எனவே இதற்கு மேல் தன்னால் வேலை செய்ய முடியாது. பணம் கொடுத்தால் ஊருக்கு சென்று விடுவதாக டிரைவர் ரவீந்திர நடேகரிடம் கூறினார். அதற்கு அவர், இப்போது இரவு நேரம் ஆகிவிட்டது. காலையில் பணம் வாங்கித்தருகிறேன். இப்போது ஊருக்கு சென்று விடு என்று கூறி உள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதை கண்ட அங்கிருந்த மற்ற டிரைவர்கள், ஓடி வந்து இருவரையும் விலக்கி விட்டனர். பின்னர் சந்தோஷ் லாரியிலும், ரவீந்திர நடேகர் குடோனின் உள்ளே வரண்டாவிலும் படுத்து தூங்கினர்.

இதனால் இரவு முழுவதும் டிரைவர் மீது கடும் ஆத்திரத்தில் சரியாக தூங்க முடியாமல் தவித்து வந்த கிளனர் சந்தோஷ், நேற்று அதிகாலையில் எழுந்து அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் ரவீந்திர நடேகர் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இந்த கொலையை மறைக்க தனது கம்பளி போர்வையை டிரைவரின் உடல் மீது போட்டு தீ வைத்து எரித்தார். இதை பார்த்த அங்கிருந்த குடோன் காவலாளி, உடனடியாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் சந்தோஷ் தப்பியோட முயற்சி செய்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அவர் போலீசாரையும் தாக்க முயன்றார். பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் டிரைவரின் உடல் மீது எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் ரவீந்திர நடேகரின் முகம் மட்டும் தீயில் எரிந்து கருகியது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story