கடலூர், விருத்தாசலத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் பவனி
கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.
கடலூர்,
ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பண்டிகை வருகிற 1-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரத்துக்குள் கழுதைக் குட்டி மேல் அமர்ந்து வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்ற வாழ்த்து பாடல்களைப் பாடினர். அந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், குருத்தோலை ஞாயிறு நேற்று கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி கடலூர் சாமிப்பிள்ளை நகர் புனித இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் இருந்து ஆலய பங்குமக்கள் குருத்தோலைகளை கைகளில் பிடித்தபடி பாடல்களை பாடி பவனியாக புறப்பட்டனர். இந்த பவனி முக்கிய வீதிகள் வழியாக அருட்தந்தையர்கள் பயிற்சி பள்ளியை சென்றடைந்தது. தொடர்ந்து பங்குதந்தை பெரியநாயகசாமி திருப்பலி நடத்தினார். அப்போது உதவி பங்கு தந்தை சேவியர் உடன் இருந்தார்.
அதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் புனித கார்மேல் அன்னை ஆலயம், பாரதிசாலை ஆற்காடு லூத்தரன் சபை, சொரக்கல்பட்டு தூய யோவான் ஆலயம், மஞ்சக்குப்பம் தூய எபிபெனி ஆலயம், முதுநகர் கிறிஸ்துநாதர் ஆலயம் ஆகிய ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடை பிடிக்கிறார்கள். இதையொட்டி தினமும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம், வருகிற 30-ந் தேதி புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் மும்மணிநேர தியான ஆராதனை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வருகிற 1-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதேபோல் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இருதயபுரம் நுழைவு வாசலில் இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் பிடித்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக அமல அன்னை ஆலயத்தை சென்றடைந்தது. பின்னர் பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதேபோல் காட்டுமன்னார்கோவில் புனித சிலுவை ஆலயத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் காட்டுமன்னார்கோவில்- திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மறைதிரு வின்சென்ட் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை சென்றடைந்தனர்.
விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்திற்கு சென்றனர். அதனை தொடர்ந்து அங்கு பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story