பறக்கை அருகே மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதி வாலிபர் பலி


பறக்கை அருகே மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 26 March 2018 3:30 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

பறக்கை அருகே தங்கைக்கு பூப்புனித நீராட்டு விழா நடக்க இருந்த நிலையில், மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

பறக்கை அருகே மதுசூதனபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் அருண்குமார் (வயது 17), கட்டிட தொழிலாளி. இவரது நண்பர்கள் அஸ்வத் (15), பிரதீஷ் (14). இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் இரவு சிங்களேயர்புரியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றனர். அருண்குமார் ஸ்கூட்டரை ஓட்டினார்.

சிங்களேயர்புரி பகுதியில் சென்றபோது, ஸ்கூட்டர் திடீரென நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

பரிதாப சாவு

இதில் ஸ்கூட்டரில் இருந்த அருண்குமார், அஸ்வத், பிரதீஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர். அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தகவல் அறிந்த சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அருண்குமார் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பூப்புனித நீராட்டு விழா

பலியான அருண்குமாரின் தங்கைக்கு நேற்று பூப்புனித நீராட்டுவிழா நடக்க இருந்தது. இதற்காக உறவினர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் கூடியிருந்தனர். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருந்த அருண்குமார், நண்பர்களை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு சென்றார். அப்போதுதான் விபத்தில் சிக்கி பலியானார்.

இதனால், மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருந்த அருண்குமாரின் வீடு சோகமயமானது. நேற்று நடைபெற இருந்த பூப்புனித நீராட்டு விழாவும் நின்று போனது. 

Next Story