ஏப்ரல் 3-ந்தேதி பாராளுமன்றம் நோக்கி மின் ஊழியர்கள் ஊர்வலம் பெரம்பலூர் கோட்ட மாநாட்டில் தீர்மானம்


ஏப்ரல் 3-ந்தேதி பாராளுமன்றம் நோக்கி மின் ஊழியர்கள் ஊர்வலம் பெரம்பலூர் கோட்ட மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 26 March 2018 4:15 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

மாநில மின்வாரியங்களை பிரிப்பதை கண்டித்து ஏப்ரல் 3-ந்தேதி பாராளுமன்றம் நோக்கி ஊர்வலம் நடத்துவது என தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் கோட்ட மாநாடு பெரம்பலூர் மூன்றுரோடு சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடந்தது. கோட்ட தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். கோட்ட இணைச் செயலாளர் கருணாநிதி வரவேற்று பேசினார். கோட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ஆண்டறிக்கையை வாசித்தார். வட்ட செயலாளர் அகஸ்டின், மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி ராஜகுமாரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதில் சிறப்பு விருந்தினராக மாநில துணை தலைவர் ரெங்கராஜன் கலந்து கொண்டு பேசினார். இந்த மாநாட்டில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ரூ.380 தினக்கூலி வழங்கிட வேண்டும்.

மின்நுகர்வோர்களுக்கு எளிதில் சேவை வழங்கிட பெரம்பலூர் கோட்டத்தை பெரம்பலூர், பெரம்பலூர் கிராமியம் என 2 கோட்டங்களாக பிரிக்க வேண்டும், பெரம்பலூரில் மின்தடைநீக்கும் மையம் அமைக்க வேண்டும், களப்பணியாளர்களுக்கு சீருடை தையல்கூலியாக ரூ.1,500 வழங்கிட வேண்டும், மின் விபத்துகளில் பெரும்பாலும் மஸ்தூர் பணியாளர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே அவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் மாநில மின்வாரியங்களை பிரிப்பதை கண்டித்தும், பிரித்த மின்வாரியத்தை ஒன்று சேர்க்க வலியுறுத்தியும், மின்சார சட்ட திருத்தம் 2014-ஐ மறுபரிசீலனை செய்யக்கோரியும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி பாராளுமன்றம் நோக்கி ஊர்வலம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story