2,569 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர்-மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினர்


2,569 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர்-மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினர்
x
தினத்தந்தி 26 March 2018 4:15 AM IST (Updated: 26 March 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரத்தில் நடந்த புதிய பண்பேற்றப்பட்ட சட்ட சேவைகள் முகாமில் 2,569 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி, மாவட்ட முதன்மை நீதிபதி ரவி ஆகியோர் வழங்கினர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பென்னாகரம் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய புதிய பண்பேற்றப்பட்ட சட்ட சேவைகள் முகாம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகவேல்ராஜ் வரவேற்று பேசினார்.

இந்த முகாமில் கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டு பேசினார். முகாமில் சட்ட பிரச்சினைகள், சமூக நல அலுவலகம் மூலம் திருமண உதவி திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களில் இருந்து உதவியை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டோர் மனுக்களை கொடுத்து ஆலோசனை பெற்றனர்.

நலத்திட்ட உதவிகள்

முகாமில் கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி ஆகியோர் அனைத்து துறைகளின் சார்பில் 2,569 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த முகாமில் போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி கலெக்டர் ராமமூர்த்தி, பென்னாகரம் வக்கீல்கள் சங்க தலைவர் சரவணன், பாலக்கோடு வக்கீல்கள் சங்க செயலாளர் பாலசரவணன் மற்றும் வக்கீல்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சண்முகவேல் நன்றி கூறினார். 

Next Story