லாரிகளில் டயர் திருடிய 9 பேர் கைது ரூ.7 லட்சம் மதிப்பிலான டயர்கள் மீட்பு


லாரிகளில் டயர் திருடிய 9 பேர் கைது ரூ.7 லட்சம் மதிப்பிலான டயர்கள் மீட்பு
x
தினத்தந்தி 26 March 2018 4:30 AM IST (Updated: 26 March 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் பகுதியில் லாரிகளில் டயர் திருடிய 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான டயர்களை மீட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல், நல்லிபாளையம் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் லாரிகளில் தொடர்ந்து டயர்கள் திருட்டு நடைபெற்று வந்தது. எனவே இதுபோன்று டயர் திருடும் கும்பலை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், கார்த்திகேயன், மாதையன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் எர்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை செய்தபோது, ஜாக்கி உள்ளிட்ட பொருட்களுடன் சரக்கு வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.


அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் நாமக்கல் தாளம்பாடியை சேர்ந்த உதயகுமார் (வயது28), பொம்மைகுட்டைமேடு அபிமன்னன் (34), சின்னமுதலைப்பட்டி கிருஷ்ணன் (49), திப்பக்காபட்டி சுரேஷ் (23), தாளம்பாடி விஜயகுமார் (26), சதீஷ்குமார் (25), நாமக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெரு சாகுல் ஹமீது (32), தாளம்பாடி சதீஸ்குமார் (29) மற்றும் மின்னாம்பள்ளி ராஜ்குமார் (22) என்பது தெரியவந்தது.

இவர்களில் உதயகுமார், அபிமன்னன், கிருஷ்ணன், சுரேஷ், விஜயகுமார் ஆகியோர் கடந்த 23–ந் தேதி வள்ளிபுரத்தில் நின்று கொண்டிருந்த பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த துரைசாமி (52) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் பாக்கெட்டில் இருந்து ரூ.500–ஐ வழிப்பறி செய்து இருப்பதும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10–ந் தேதி தில்லை நகர் டயர் குடோனில் பூட்டை உடைத்து 4 டயர்களை இந்த கும்பல் திருடி இருப்பதும் தெரியவந்தது.

மேலும் கடந்த 16–ந் தேதி மணியாரம்புதூரில் செல்வகுமார் என்பவரது கோழிப்பண்ணையில் நிறுத்தியிருந்த லாரிகளில் உள்ள 10 டயர்களை சுரேஷ், விஜயகுமார், சதீஷ்குமார், உதயகுமார், சாகுல் ஹமீது, அபிமன்னன், கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து திருடி இருப்பதும், 18–ந் தேதி காதப்பள்ளி நடராஜன் அரிசி மில் வளாகத்தில் நிறுத்தியிருந்த லாரிகளில் உள்ள 12 டயர்களை இந்த கும்பல் திருடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருட்டு போன சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 26 டயர்கள் மீட்கப்பட்டன. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனத்தில் சென்று வழியில் பழுது ஏற்பட்டது போல் நிறுத்திக் கொண்டு அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் லாரிகளில் இருந்து டயர்களை திருடி இருப்பது போலீசார் விசாரணையில் வெளியானது. டயர் திருடும் கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.

Next Story