அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை வழி மடக்கி கத்தியால் வெட்டு


அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை வழி மடக்கி கத்தியால் வெட்டு
x
தினத்தந்தி 26 March 2018 4:45 AM IST (Updated: 26 March 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை வழி மடக்கி கத்தியால் வெட்டியதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை வழி மடக்கி 2 பேர் கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்நகர் கிராமத்தில் ஏரிக்கரை கொல்லமேடு பகுதியில் வசிப்பவர் எம்.சி.ரவி (வயது 60), முன்னாள் அ.தி. மு.க. ஒன்றிய கவுன்சிலர். தற்போது மேல்நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனராக உள்ளார்.

இவர், தினமும் அதிகாலையில் ஒண்ணுபுரம் தேவாங்க புரம் ரெயில்வே கேட் அருகில் உள்ள டீக்கடைக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் ரவி டீக்கடைக்கு வந்துள்ளார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமடக்கி கத்தியால் தலை, கை உள்பட பல்வேறு இடங்களில் வெட்டினர். ரவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அதற்குள் அவரை வெட்டிய 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

படுகாயம் அடைந்த ரவியை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Next Story