பூஜைக்கு பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை


பூஜைக்கு பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 March 2018 3:37 AM IST (Updated: 26 March 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

பூஜைக்கு பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் கலப்பட நெய் தயாரித்து கடைகளில் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதில் பூஜைக்கு பயன்படுத்தும் நெய்யை, சமையல் நெய் என கூறி விற்பனை செய்வதாக கூறப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பாக்கெட், டப்பாக்களில் அடைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெய்யை பறிமுதல் செய்தனர். அதில் பூஜைக்கு மட்டும் பயன்படுத்தவும் என்று மிகவும் சிறிய எழுத்துகளால் அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நெய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நெய்யை மதுரையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் அந்த நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் தற்போது ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் உள்ளன. அவற்றை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல ஒட்டன்சத்திரம் பகுதியில் தயிர், நெய் மார்க்கெட் இயங்கி வருகிறது. கொழுப்புடன் கூடிய தயிர், நெய்யை தான் சாப்பிட வேண்டும். ஆனால் அந்த மார்க்கெட்டில், கொழுப்பு நீக்கிய தயிர், நெய் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் விற்கப்படும் பாக்கெட் நெய்யில், பாமாயில் கலக்கப்பட்டுள்ளது.

நெய் அடைப்பதற்காக தயாரிக்கப்பட்ட பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, அதில் சமையலுக்கு பயன்படுத்திய கழிவு பாமாயிலை ஊற்றி, நெய் என விற்பனை செய்கின்றனர். உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி பூஜைக்கு பயன்படுத்தப்படும் நெய்யையும், சமையலுக்கு பயன்படுத்தும் தரத்துடன் தயாரிக்க வேண்டும். பூஜைக்கு நெய்யை பயன்படுத்திய பின்பு அதனை மனிதர்கள் சாப்பிடுகின்றனர்.

மேலும் அந்த நெய்யால் விளக்கு ஏற்றும் போது அதில் இருந்து வரும் புகையை மனிதர்கள் சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுகிது. இதனால் உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பூஜைக்கு பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story