தேவதானப்பட்டி பகுதியில் நெல்லுக்கு போதிய விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


தேவதானப்பட்டி பகுதியில் நெல்லுக்கு போதிய விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 March 2018 3:45 AM IST (Updated: 26 March 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லுக்கு போதிய விலை கிடைக்க வேண்டும் என்று தேவதானப்பட்டி விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தேவதானப்பட்டி,

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் மஞ்சளாறு அணை நிரம்பவில்லை. இதனால் நெல் சாகுபடி செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டில் மழை பெய்து மஞ்சளாறு அணை நிரம்பியது. இதனால் தேவதானப்பட்டி பகுதியில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

தற்போது இந்த பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 61 கிலோ எடை கொண்ட என்.எல்.ஆர். ரக நெல்லை 900 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இதில் 61 கிலோவுக்கு பதிலாக 65 கிலோ நெல் எடை போடப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் கொள்முதல் செய்யப்பட்டதற்கான பணத்தை உடனடியாக கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. மேல்மங்கலம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நியாயமான விலை கிடைப்பதாகவும், ஆனால் அரசு அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தான் வியாபாரிகளை நாடவேண்டி உள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே நெல் விவசாயிகளின் கஷ்டத்தை போக்கி போதிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story