நாகர்கோவிலில் பரபரப்பு: ஆஸ்பத்திரியின் 4–வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை


நாகர்கோவிலில் பரபரப்பு: ஆஸ்பத்திரியின் 4–வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 March 2018 4:45 AM IST (Updated: 26 March 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் 4–வது மாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலை சேர்ந்தவர் நித்யா (வயது 28). இவர் ஏற்கனவே திருமணமாகி, கணவரை விவாகரத்து செய்திருந்தார். இந்த நிலையில் கோட்டார் சவுராஷ்டிரா வேம்படி தெருவை சேர்ந்த அய்யாவு என்ற முருகனை, நித்யா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2–வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். முருகன் எலக்ட்ரீசியன் ஆவார்.

நித்யாவுக்கு அவ்வப்போது வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவருடைய கணவர், நித்யாவை பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனாலும் வயிற்று வலி குணமாகவில்லை எனக்கூறப்படுகிறது.


இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் நித்யாவுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோட்டாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை அய்யாவு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வயிற்றுவலிக்கு சிகிச்சை அளிக்க அந்த ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதித்தனர். 4 மாடி கட்டிடமான அந்த ஆஸ்பத்திரியில் நித்யா 2–வது மாடியில் உள்ள ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு உதவியாக அவருடைய மாமியார் உடன் இருந்து கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு டாக்டர்கள் நித்யாவை பரிசோதித்து பார்த்துவிட்டு சென்றனர். இதையடுத்து நித்யாவும், அவருடைய மாமியாரும் அந்த அறையில் தூங்கினர். நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் நித்யாவின் மாமியார் கண்விழித்து பார்த்தபோது, அருகில் கட்டிலில் படுத்திருந்த நித்யாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மாமியார் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அந்த ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நள்ளிரவாக இருந்ததால் விடிந்ததும் தேடிப்பார்ப்போம் என்றிருந்தனர்.


இந்த தனியார் ஆஸ்பத்திரியின் பின்புறம் ஆறுமுகம் பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டில் வசிப்பவர்கள் நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறை பகுதிக்கு சென்றபோது அவர்களுக்கு திடீர் அதிர்ச்சி காத்திருந்தது. தண்ணீர் பிடித்து வைக்க பயன்படும் பிளாஸ்டிக் பாத்திரத்துக்குள் ஒரு பெண் தலைகுப்புற விழுந்த நிலையில் பிணமாக கிடந்தது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். பிணமாக கிடந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.

உடனே அவர்கள் அக்கம் பக்கத்தினரிடமும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதும் அந்த வீட்டில் ஏராளமானோர் கூடினர். ஆஸ்பத்திரி ஊழியர்களும் அங்கு சென்று பார்த்தனர். அப்போதுதான் அந்த வீட்டின் குளியலறையில் பிணமாக கிடந்தது நித்யா என்று தெரிய வந்தது. அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை கட்டிடத்தின் 4–வது மாடியின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.


இதற்கிடையே கோட்டார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு 1 மணி அளவில் நித்யா தனது அறையில் இருந்து எழுந்து மெதுவாக கதவைத் திறந்து வெளியே வந்து, அந்த ஆஸ்பத்திரியின் மாடிப்படிகளில் ஏறி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.


இருப்பினும் நித்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தனக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் நித்யா தற்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story