கோவிலில் சிலைகள் உடைப்பு; உண்டியல் பணம் கொள்ளை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


கோவிலில் சிலைகள் உடைப்பு; உண்டியல் பணம் கொள்ளை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 March 2018 3:45 AM IST (Updated: 26 March 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே கோவிலில் சிலைகளை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அழகியமண்டபம்,

நாகர்கோவிலை அடுத்த வில்லுக்குறி அருகே மணக்கரை புளியன்விளையில் சிவசுடலை மாடசாமி கோவில் உள்ளது. அங்கு சிவசுடலை மாடசாமி, இசக்கியம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்த பின்பு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள், கோவிலின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில் நிர்வாகிகள் விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது, கோவிலில் இருந்த சிவசுடலை மாடசாமி சிலை, இசக்கியம்மன் சிலை உள்பட 3 சிலைகள் உடைக்கப்பட்டு கீழே கிடந்தன.

உண்டியல் பணம் கொள்ளை


மேலும், கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் கருவறையில் இருந்த திரிசூலம், குத்துவிளக்கு, தட்டு போன்ற பூஜை பொருட்கள் கொள்ளை போனதும் தெரியவந்தது

நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்துள்ளனர். பின்னர், உண்டியல் பணம் மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றதாக தெரிய வருகிறது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி அய்யப்பன், இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story