கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 March 2018 3:45 AM IST (Updated: 27 March 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது அங்கு மனு கொடுக்க வந்த ஒரு நபர் திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீசார், அந்த நபரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்

விசாரணையில், அவர் கயத்தாறு தாலுகா அச்சங்குளம் கோவிந்தம்பட்டியை சேர்ந்த வேலாயுதம் மகன் கனகராஜ் (வயது 39) என்பதும், அவர் ஒரு விவசாயி என்பதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணையின் போது கனகராஜ் கூறியதாவது:- நான் விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்காக நெல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கினேன். இதற்கு முன்பணமாக ரூ.3 லட்சம் செலுத்தினேன். ஆனால் அதற்கு அந்த நிதிநிறுவனம் சார்பில் எந்த ஆவணமும் தரவில்லை. தொடர்ந்து நானும் 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.15 ஆயிரம் தவணை தொகை கட்டி வந்தேன். இன்னும் ஒரு தவணை மட்டுமே பாக்கி உள்ளது.

இந்த நிலையில் அந்த நிதிநிறுவனம் அதிக தொகை பாக்கி இருப்பதாக கூறி, எனக்கு தெரியாமல் கடந்த 23-ந்தேதி சட்ட விரோதமாக டிராக்டரையும், சுழலும் கலப்பையையும் எடுத்து சென்று உள்ளனர். இதனால் நான் மனமுடைந்து உள்ளேன். எனக்கு தெரியாமல் என் டிராக்டரை எடுத்து சென்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீசார் கனகராஜ் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story