தமிழகத்தில் பா.ஜ.க. துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


தமிழகத்தில் பா.ஜ.க. துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 27 March 2018 4:30 AM IST (Updated: 27 March 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜ.க. துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் பாரதீய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர பாரதீய ஜனதாவால் மட்டுமே முடியும்.

தி.மு.க. மாநாட்டில் பிரதமரை மிக மோசமாகவும், மிகவும் கீழ்தரமாகவும் பேசிய பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரீகம் காப்பாற்றுபவராக இருந்தால் பிரதமரை மிக மோசமாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை. மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்த போது, காவிரி பிரச்சினையை தீர்க்காமல், முற்றவிட்டு இன்று அவசரப்படுகின்றனர். தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்கிறோம் என்கின்றனர். முதலில் தி.மு.க.வினர் ராஜினாமா செய்ய வேண்டும். அன்று காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக்கொள்ள காவிரியை விட்டு கொடுத்தனர்.

தமிழகம் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். கிளர்ச்சியை நோக்கி செல்லக்கூடாது என்பதே பா.ஜ.க.வின் குறிக்கோள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய தலைமைக்கு எங்களது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது தேசிய செயற்குழு உறுப்பினர் ராம கிருஷ்ணா சிவசுப்ரமணியம், மாவட்ட தலைவர் சாமி இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story