மணல் லாரி டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் தம்பதி: நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு


மணல் லாரி டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் தம்பதி: நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு
x
தினத்தந்தி 27 March 2018 3:15 AM IST (Updated: 27 March 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

மணல் லாரி டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

பெருந்துறை மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பாஸ்கர் குமார், பொருளாளர் குமரேசன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

எங்களது சங்கம் அரசால் பதிவு செய்யப்பட்ட சங்கம் ஆகும். 300-க்கும் மேற்பட்டவர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். 900 லாரிகள் வைத்து மணல் தொழில் செய்து வருகிறோம். அரசால் அனுமதிக்கப்பட்ட 2 யூனிட் மணல் மட்டும் எங்களது சங்கத்தின் லாரிகளில் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லப்பட்டு கட்டி உரிமையாளர்களிடம் சேர்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பெருந்துறையை சேர்ந்த ஒரு தம்பதியினர், எங்களது சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படும்போது லாரிகளை வழி மறித்து, ‘இந்த மணல் திருட்டு மணலா?, உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் செய்கிறார்கள்.

அவர்களிடம் டிரைவர்கள் உரிய ஆவணங்களை எடுத்துக்காட்டினால் அவற்றை கிழித்து விட்டு லாரியை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லுமாறு மிரட்டுகிறார்கள். மேலும் லாரி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரமும் கேட்கிறார்கள். இதனால் எங்களால் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை. எனவே பணம் கேட்டு மிரட்டும் தம்பதியை அழைத்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு செல்வவிநாயகர் கோவில், சக்தி முத்துமாரியம்மன் கோவிலை நாங்கள் அமைத்து ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வந்தோம். கடந்த 2013-ம் ஆண்டு கோவிலில் திருப்பணிகள் தொடங்கி 4 ஆண்டுகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கடந்த 16.7.2017 அன்று கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது வருகிற 17.4.2018 அன்று பூச்சாட்டுதலுடன் கோவிலில் திருவிழா நடத்த திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் ஒரு சமூகத்தினர் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே கோவில் திருவிழா சிறப்பாக நடக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

ஈரோடு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராதாமணி பாரதி கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள அனைத்து சந்துகளிலும் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டத்துக்கான கட்டண வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு காவிரி ரோடு பகுதியில் இருந்து கற்பகம் லே அவுட் பகுதி வரை செல்லும் சாக்கடை கால்வாயையும், மோசிகீரனார் வீதி வழியாக செல்லும் சாக்கடை கால்வாயையும் உடனடியாக தூர்வார வேண்டும். மேலும் ஈரோடு மாதவகிருஷ்ணா வீதி, நேதாஜி தினசரி மார்க்கெட், செல்லபாட்ஷா வீதி ஆகிய பகுதிகளில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வீதிகளில் தார்ரோடு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 191 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முதல் -அமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ், நீரில் மூழ்கி மற்றும் தீ விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும், 2016- 17-ம் ஆண்டு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் பெற்ற 15 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.70 ஆயிரத்துக்கான காசோலையையும் மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாபு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள். 

Next Story