“வார்டு மறுவரையறை பணிகளால் தான் உள்ளாட்சி தேர்தல் தாமதமாகிறது” தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தகவல்


“வார்டு மறுவரையறை பணிகளால் தான் உள்ளாட்சி தேர்தல் தாமதமாகிறது” தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தகவல்
x
தினத்தந்தி 27 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

வார்டு மறு வரையறை பணிகள் நடந்து வருவதால் தான் உள்ளாட்சி தேர்தல் தாமதமாகிறது என தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. ஆனால் சில, பல அரசியல் காரணங்களுக்காக தற்போது வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ஜூலை மாதம் (அதாவது 2017-ம் ஆண்டு ஜூலை மாதம்) தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கோர்ட்டில் தெரிவித்தது.

ஆனால் அவர்கள் கூறியது போல தேர்தல் நடத்தப்படவில்லை. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த அக்டோபர் மாதம் 2 கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போதும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சித்துறையுடன் தொடர்புடைய சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உள்ளாட்சி பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு விருப்பம் இல்லை என்பது தெரிய வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு நடத்தி போர்க்கால அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் வார்டுகள் உள்ளன. அவற்றை மறுவரையறை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து 19 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த பணிகளால் தான் தேர்தல் நடத்துவதற்கு தாமதம் ஏற்படுகிறது” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story