காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வாய்ப்பை தி.மு.க. நழுவ விட்டது - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வாய்ப்பை தி.மு.க. நழுவ விட்டது - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 March 2018 4:00 AM IST (Updated: 27 March 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வாய்ப்பை தி.மு.க. நழுவ விட்டது என்று கோவையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

கோவை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளையொட்டி கோவை புறநகர் மாவட்ட அதி.மு.க. சார்பில் 86 ஏழை ஜோடிகளுக்கு கோவை தொண்டாமுத்தூரில் நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமண விழா நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் ஹர்மந்தர்சிங் வரவேற்றார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாங்கல்யத்தை எடுத்துக்கொடுத்து 86 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அட்சதை தூவி மணமக்களை அவர்கள் வாழ்த்தினர். விழாவில் மணமக்களுக்கு கட்டில், மெத்தை, பீரோ, கியாஸ் அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்ட 70 வகையான சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய பிறந்தநாளை ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி நாங்கள் அந்த பணியை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறோம். தமிழக அரசு மதசார்பற்ற அரசு என்பதற்கு இந்த திருமணமே சான்று. இங்கு இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தனித்தனியாக திருமண சடங்குகள் நடத்தப்பட்டன.

யார் யாரோ மதத்தை பற்றி பேசுகிறார்கள். தமிழகத்தில் மதச்சார்பற்ற ஆட்சி செய்கின்ற அரசு அ.தி.மு.க.தான் என்பதை ஆணித்தனமாக தெரிவித்துக்கொள்கிறேன். பிரிவினை இங்கு கிடையாது. அனைவரும் சமம். இந்திய வரலாற்றிலேயே எந்த மாநிலத்திலும் தாலிக்கு தங்கம் திட்டம் கிடையாது. இன்றைக்கு கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் எல்லா துறைகளிலுமே அ.தி.மு.க. ஆட்சியிலே தான் வளர்ந்து, உயர்ந்திருக்கிறது.

ஈரோட்டில் நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சொடக்கு போட்டால் இந்த ஆட்சி இருக்காது என்று சொன்னார். கடப்பாரையை போட்டு நெம்பினால்கூட இந்த ஆட்சியை அசைக்க முடியாது. நீங்கள் ஏற்கனவே இந்த ஆட்சியை அகற்றுவதற்கு எடுத்த அத்தனை முயற்சிகளும் வலுவிழந்து போய்விட்டது.

வரலாறு காணாத அளவிற்கு சட்டமன்றத்திலே அமளியை ஏற்படுத்தினார்கள், ரகளை செய்தார்கள். அப்போது கூட, நாங்கள் தாக்குபிடித்து அதையும் முறியடித்து, அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றி இன்றைக்கு சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம். உங்களுடைய கனவெல்லாம் பகல் கனவாகத்தான் இருக்கும், கானல் நீராகத்தான் இருக்குமே தவிர, நிச்சயம் ஒருபோதும் உங்களுடைய எண்ணம் நிறைவேறாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் சிப்பாய்களாக இந்த இயக்கத்திற்கும், ஆட்சிக்கும் பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. அரசை கலைத்து விடலாம் என்று கனவில்கூட நீங்கள் நினைக்கக்கூடாது, நினைத்தாலும் பலிக்காது.

இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியம் பற்றி மு.க.ஸ்டாலின் பேசுகிறார். 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மத்தியிலும் இவர்கள் ஆட்சியிலே அமர்ந்தார்கள். 1999-ல் தமிழகத்திலும் ஆட்சி செய்தார்கள். 14 ஆண்டுகாலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்திலே தி.மு.க. இணைந்து இருந்தது.

தமிழகத்திலும் அவர்களுடைய ஆட்சி, மத்தியிலும் அவர்களுடைய ஆட்சி. பாரதீய ஜனதாவிலும் அங்கம் வகித்தார்கள், காங்கிரசிலும் அங்கம் வகித்தார்கள். ஆனால் காவிரி மேலாண்மை அமைவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? எதுவும் செய்யவில்லை, துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.

ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தியதால் இன்றைக்கு நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை நாம் பெற்றோம். அந்த நடுவர் மன்ற இறுதி தீர்ப்பைக்கூட அரசிதழில் வெளியிட முடியாத ஒரு மோசமான சூழ்நிலையை அவர்களுடைய ஆட்சியிலே பார்க்க முடிந்தது. 2007-ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது, அவர்கள் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எளிதாக பெற்றிருக்கலாம்.

காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைத்திருக்கலாம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இன்றைக்கு இவ்வளவு பிரச்சினைக்கு இடமில்லாமல் போயிருக்கும். ஆனால் அவர்கள் அதை நினைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.

இன்றைக்கு காவிரி பாசனம் பெறுகின்ற டெல்டா பாசன விவசாயிகளுடைய எண்ணம் அவர்களுக்கு வரவில்லை. அவர்களுடைய எண்ணமெல்லாம் அதிகாரம். மத்தியிலும் அதிகாரத்தில் இருக்க வேண்டும், மாநிலத்திலும் அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரத்தை பெறுவதில்தான் குறிக்கோளாக இருந்தார்களே தவிர, நாட்டு மக்களுடைய நன்மையோ, நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையை மத்தியில் இருந்து பெற்று தருவதற்கு ஒருபோதும் அவர்கள் முயற்சி மேற்கொண்டதே கிடையாது.

ஆகவே, இவ்வளவு பாதிப்புக்குள்ளாவதற்கு காரணம் தி.மு.க. தான். ஆட்சி, அதிகாரத்திலே இருக்கிறபோது தி.மு.க. அதை நழுவவிட்டது. அதை செய்யாமல் துரோகம் விளைவித்தது தி.மு.க. என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, இரண்டையும் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு வைத்திருக்கிறார்கள். அந்த கெடு வருகிற 29-ந் தேதி வரை தான் இருக்கிறது. அதற்குள் மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வோம். ஆகவே, இன்றைக்கு அ.தி.மு.க, அரசை பொறுத்தவரைக்கும், நாட்டு மக்கள்தான் முக்கியம். தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பெறுவதற்கு அ.தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, துரைக்கண்ணு, ராஜேந்திரபாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பணன், டாக்டர் சரோஜா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story