பாலக்கோடு அருகே கார் மோதி 2 பெண்கள் பரிதாப சாவு


பாலக்கோடு அருகே கார் மோதி 2 பெண்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 27 March 2018 3:45 AM IST (Updated: 27 March 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் அடுத்த கண்டகபைல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி காவேரியம்மாள் (வயது 45). அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மனைவி சின்னபாப்பா (42). இவர்கள் இருவரும் தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தனர்.

அதற்கான கூலியை வங்கி கணக்கில் இருந்து எடுப்பதற்காக நேற்று பஸ்சில் மல்லுப்பட்டிக்கு காவேரியம்மாள், சின்னபாப்பா ஆகியோர் சென்றனர். பின்னர் அவர்கள் வங்கியில் பணத்தை எடுத்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். கண்டகபைல் கிராமத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய இருவரும் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று காவேரியம்மாள், சின்னபாப்பா ஆகியோர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த காவேரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சின்னபாப்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னபாப்பா பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த காவேரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி, காவேரியம்மாள், சின்னபாப்பா ஆகியோரின் உடலை வாங்க மறுத்து பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் அவர்களுடைய உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், தாசில்தார் அருண் பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story