இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு


இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என கிராமமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் போச்சம்பள்ளி தாலுகா பட்ரஹள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்த பொது மக்கள் நேற்று கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எங்கள் கிராமத்தில் 300 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இதில் சுமார் 150 குடும்பங்களுக்கு மட்டுமே வீடு உள்ளது. மற்றவர்களுக்கு வீடு இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பல்வேறு போராட்டத்திற்கு பின் எங்கள் குடியிருப்புக்கு அருகில் சுமார் 2.75 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி தமிழக முதல்வரால் 82 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

மிரட்டல்

இதையடுத்து வீட்டுமனை பட்டா வழங்கிய 82 நபர்களுக்கு மனைகள் பிரிக்கப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனைகளை அளவீடு செய்ய அதிகாரிகள் வரும் போது, எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர், அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, தனக்கும் வீட்டுமனை பட்டா வழங்கினால் மட்டுமே அளக்க அனுமதிப்பேன் என மிரட்டுகிறார்.

ஏற்கனவே அவருக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அந்த வீட்டை மத்தூர் கீழ்வீதி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ. 10 லட்சத்திற்கு விற்றுவிட்டார். இப்படிப்பட்ட ஒருவருக்காக அதிகாரிகள் 82 பேருக்கு வீட்டுமனை இடத்தை அளந்து கொடுக்காமல் இருப்பது எங்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகிக்கியுள்ளது. எனவே, போலீசார் பாதுகாப்புடன் எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவிற்கான இடத்தை அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story