நித்யானந்தா தியான பீடத்தில் இருந்து மனைவி, மகனை மீட்டுத்தர வேண்டும் விவசாயி மனு


நித்யானந்தா தியான பீடத்தில் இருந்து மனைவி, மகனை மீட்டுத்தர வேண்டும் விவசாயி மனு
x
தினத்தந்தி 27 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

நித்யானந்தா தியான பீடத்தில் இருந்து மனைவி மற்றும் மகனை மீட்டுத்தரக்கோரி ராசிபுரம் விவசாயி ஒருவர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் மாசி காட்டை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் மளிகை கடை மற்றும் பூச்சி மருந்து கடையும் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி அத்தாயி (வயது 40) என்ற மனைவியும், பழனிசாமி (26) என்ற மகனும் உள்ளனர். ராமசாமி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமியிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மனைவியும், மகனும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெங்களூருவில் உள்ள நித்யானந்தா தியான பீடத்திற்கு சென்றனர். பின்னர் நீண்ட நாட்களாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. நான் அங்கு சென்று அவர்களை பார்க்க முயன்றபோதும் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே மனைவி மற்றும் மகனை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிரட்டல்

அதை தொடர்ந்து நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்த ராமசாமி, தனது மனைவி மற்றும் மகனை பார்க்க பீடத்திற்கு சென்றால் அங்கு அவர்களை பார்க்கவிடாமல் குண்டர்கள் தன்னை மிரட்டுவதாக கூறினார். 

Next Story