போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற  தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 28 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

மாதந்தோறும் 1–ந் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும், 1–1–2016 முதல் அகவிலைப்படி உயர்வை நிலுவைத்தொகையுடன் உடனே வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தப்படி 1–9–2003–ல் இருந்து 31–8–2016 வரை நிலுவையில் உள்ள 30.5 சதவீத அடிப்படை ஓய்வூதிய உயர்வை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் பத்மனாபபிள்ளை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தங்கப்பன் வரவேற்று பேசினார். பிரான்சிஸ் சேவியர், வெங்கடாச்சல மூர்த்தி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு பொருளாளர் சைமன், சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாத்துரை உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் மரியதாசன் நன்றி கூறினார்.

Next Story