தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க நல்லசாமி கோரிக்கை
தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தாராபுரம்,
தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ‘கள்‘ இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ‘கள்‘ இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ‘கள்’ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்குவதற்காக கடந்த 31.5.2009-ல் நீதிபதி கே.பி சிவசுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை இன்றுவரை வெளியிடப்படவில்லை. விவசாயிகளின் நலனில் அக்கறை இருப்பதாக கூறிக்கொள்ளும் அ.தி.மு.க. அரசு, நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் அறிக்கையை உடனே வெளியிடவேண்டும்.
தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு 12 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது 4 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இலங்கையில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பனை மரங்களை வெட்டுவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு கொண்டுவர மாட்டார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் வாதிகள் தயாரிக்கும் மதுபானத்தை விட, ‘கள்‘ எவ்வளவோ சிறந்த பானம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் 108 நாடுகளில் பனை மரங்களும், தென்னை மரங்களும் வளர்க்கப்பட்டு, ‘கள்‘ உற்பத்தி செய்யப்படுகிறது. எங்குமே ‘கள்’ளுக்கு தடையில்லை. தமிழகத்தில் மட்டும் தான் கடந்த 30 ஆண்டுகளாக ‘கள்’ளுக்கு தடை இருந்து வருகிறது. ‘கள்’ளுக்கு உள்ள தடையை நீக்கினால் ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், ‘கள்’ளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்காமல் இருக்கிறது. அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள், புதிய அரசியல் கட்சிகளை தொடங்குபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
‘கள்’ளுக்கு உள்ள தடையை நீக்குவோம் என்று விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். தற்போது அரசு, நீரா பானம் உற்பத்திக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அதற்கு அரசு விதித்துள்ள நிபந்தனைகளைப் பார்க்கும் போது, நீரா பானம் உற்பத்தியில் ஈடுபடுவது கடினமாக உள்ளது. நீரா பானத்தில் ஆல்ஹகால் இல்லை. இது சத்தான பானம். தாய் பாலுக்கு இணையானது. இதை எளிதாக உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அதன் மூலம் அன்னியச் செலாவணியை அரசுக்கு ஈட்டமுடியும்.
பனை, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே மாநில அரசு நீரா பானம் உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கைவிட வேண்டும். தென்னை, பனை விவசாயிகளுக்கு மானியங்களை அறிவித்து, விவசாயிகளை ஊக்கப்படுத்தி நீரா பானம் உற்பத்திக்கு உதவிட வேண்டும் என அவர் கூறினார்.
Related Tags :
Next Story