கார் மீது லாரி மோதல்; முன்னாள் எம்.எல்.ஏ. உயிர் தப்பினார்
காங்கேயத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உயிர் தப்பினார்.
காங்கேயம்,
காங்கேயத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நெய்க்காரன்பாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலைகளும் அதே பகுதியில் உள்ளன.
இந்த நிலையில் என்.எஸ்.என்.நடராஜ் நேற்று காலையில் காரில் வெளியூர் சென்றார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு சென்னிமலையில் இருந்து நெய்க்காரன்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார். காரை நல்லசிவம் (வயது 50) என்பவர் ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே என்.எஸ்.என்.நடராஜ் அமர்ந்து இருந்தார்.
கார் நெய்க்காரன்பாளையத்தில் உள்ள அவருடைய எண்ணெய் ஆலை அருகே சென்றதும், காரை நிறுத்துவதற்கு காரின் வேகத்தை டிரைவர் குறைத்துள்ளார். அப்போது அவருடைய காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, ஒன்று காரின் பின் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் காரின் பின் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
இருப்பினும் காரின் முன் இருக்கையில் என்.எஸ்.என்.நடராஜ் அமர்ந்து இருந்ததால், அவரும், கார் டிரைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story