குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து மீட்கப்பட்ட குட்டி யானை, தாயுடன் சேர்ந்தது


குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து மீட்கப்பட்ட குட்டி யானை, தாயுடன் சேர்ந்தது
x
தினத்தந்தி 28 March 2018 4:15 AM IST (Updated: 28 March 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து மீட்கப்பட்ட குட்டி யானை, தாயுடன் சேர்ந்தது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் போடூர் வனப்பகுதியில் 7 காட்டு யானைகள் 3 குழுக்களாக முகாமிட்டு சுற்றி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 மாத குட்டியுடன் 2 யானைகள் நாயக்கனப்பள்ளி பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றன. அங்கு குளித்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தன. அப்போது குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் 2 மாத குட்டி யானை தவறி விழுந்தது.

அந்த குட்டியை மீட்க 2 யானைகளும் போராடியது. அந்த யானைகள் பிளிரும் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இது குறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் 2 யானைகளையும் போடூர்பள்ளம் காட்டுப்பகுதிக்கு விரட்டினார்கள்.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் குழிக்குள் விழுந்த, யானை குட்டியை கயிறு கட்டி மேலே தூக்கினார்கள். இந்த குட்டி யானையை வனத்துறையினர் தாயுடன் சேர்க்க போடூர்பள்ளம் காட்டுப்பகுதிக்கு கொண்டு விட்டனர். இந்த குட்டி யானை, தாய் யானையுடன் சேருகிறதா? என வனத்துறையினர் கண்காணித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போடூர்பள்ளம் காட்டிற்கு சென்ற குட்டி யானை அதன் தாயுடன் சேர்ந்தது. வழக்கமாக மீட்கப்படும் குட்டி யானைகளை பொதுமக்கள் தொடுவதால், மனித வாடைக்கு அந்த குட்டியை அதன் தாய் யானை சேர்க்காது என்று கூறப்படுகிறது. இதனால் குட்டி யானை அதன் தாயுடன் தொடர்ந்து இருந்து வருகிறதா? அல்லது போடூர்பள்ளம் காட்டில் தனியாக சுற்றுகிறதா? என்று வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

Next Story