கன்னேரிமுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் மனு பரிசீலனைக்கு தேர்தல் அலுவலர் வராததால் வேட்பாளர்கள் ஏமாற்றம்


கன்னேரிமுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் மனு பரிசீலனைக்கு தேர்தல் அலுவலர் வராததால் வேட்பாளர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 28 March 2018 3:45 AM IST (Updated: 28 March 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

கன்னேரிமுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்பு மனு பரிசீலனைக்கு தேர்தல் அலுவலர் வராததால் வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில் மகாலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் திம்பட்டி, கடக்கோடு, அணையட்டி, குன்னியட்டி, நாரகிரி, கம்பட்டி, கப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 3500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த கூட்டுறவு சங்கத்தில் 3 பெண்கள், 2 எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் மற்றும் 6 பொது பிரிவினர் என 11 நிர்வாக இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் ரவியிடம் 37 உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாலை 5 மணியளவில் பரிசீலனை செய்யப்பட்ட மனுக்களின் பட்டியல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வேட்பு மனு செய்தவர்கள் காலை முதல் கடன் சங்க வளாகத்தில் காத்திருந்தனர்.

ஆனால் தேர்தல் அலுவலரோ அல்லது வங்கி செயலாளரோ வராததால் அங்கிருந்த ஊழியர்களிடம் வேட்பாளர்கள் இதுகுறித்து கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என பதில் கூறியதால் இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கூறும் போது, இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு உறுப்பினர்கள் என இரண்டு வகையாக பிரித்துள்ளனர். இதில் ‘ஏ’ பிரிவு உறுப்பினர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளதால் தங்களுக்கு சாதகமானவர்களை ‘ஏ’ பிரிவு உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு மற்றவர்களை ‘பி’ பிரிவுக்கு மாற்றி விடுவதுடன் ஏற்கனவே 11 நிர்வாக இயக்குனர்களை தாங்களாகவே தேர்வு செய்து வெற்றி பெற்றதாக அறிவித்து முறைகேடாக தேர்தலை நடத்த திட்டமிடுகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.

இது சம்பந்தமாக கூட்டுறவு வங்கிகளின் தேர்தலை நடத்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் காலை 11 மணி முதல் 4 மணி வரை தேர்தல் அலுவலர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்ய வரவில்லையே. எனவே மற்றொரு நாளுக்கு பரிசீலனை செய்யும் தேதி மாற்றி வைக்கப்படுமா? என கேட்ட போது சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் வருவார். மாற்று தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை எனவும் சிறிது நேரம் காத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் கடன் சங்க வளாகத்தில் காத்திருந்தனர். மாலை 6 மணி ஆகியும் மனு பரிசீலனைக்கு தேர்தல் அலுவலர் வரவில்லை. பின்னர் வேட்பாளர்கள் சென்னை தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இந்த புகார் ஏற்று கொள்ளப்பட்டு விட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாக வேட்பாளர்கள் கூறினார்கள்.

இது குறித்து வேட்பாளர்கள் கூறும் போது, மனு பரிசீலனைக்கு தேர்தல் அலுவலர் வராததால் தற்போது நடைபெறும் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த பிரச்சினையில் கவனம் கொண்டு வேறு ஒரு நாளில் வேட்பு மனு பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 35 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் 683 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது. இன்றும் தொடர்ந்து வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 23 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்ட தேர்தலில் 218 பேர் மனு தாக்கல் செய்தனர். 2 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 216 மனுக்கள் ஏற்கப்பட்டன. 

Next Story