கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை திருட்டு


கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 28 March 2018 3:45 AM IST (Updated: 28 March 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே, கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த, 12 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மாரண்டப்பள்ளியில், குன்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதேபகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 42) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். மிகவும் பழமையான இந்த கோவில் சமீபத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு, கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் நிறைவு பெற்றதால், மண்டல பூஜை நடத்த முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த, 12 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணை

அதேபோல், குன்டியம்மன் கோவில் அருகே உள்ள பாரத கோவிலின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் திருட முயன்று இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story