மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க நீதித்துறையில் இருப்பவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் - இந்திரா பானர்ஜி


மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க நீதித்துறையில் இருப்பவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் -  இந்திரா பானர்ஜி
x
தினத்தந்தி 28 March 2018 4:45 AM IST (Updated: 28 March 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு நீதித்துறையில் இருப்பவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.22 கோடியே 55 லட்சம் செலவில் புதிதாக 12 நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சரோஜினிதேவி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் பிரேம்சந்தர் வரவேற்றார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நீதிமன்றங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, அதற்கான கல்வெட்டை திறந்து வைத்தனர். அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பேசியதாவது:-

நீதித்துறையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒதுக்கி வருகிறது. இன்று அடிக்கல் நாட்டப்படும் கூடுதல் கட்டிடங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கும், புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்தையும் இணைக்கும் வகையில் திட்டப்பணிகள் அமைய வேண்டும். இதற்கு இடையில் உள்ள விருந்தினர் மாளிகையை அகற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்.

நீதித்துறையின் நடவடிக்கைகளுக்கு வக்கீல்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வக்கீல்கள் தங்களின் திறமையான வாதங்களை கொடுப்பதன் மூலம் தீர்ப்பு வழங்க முடியும். தற்போதுள்ள வக்கீல்கள் நன்கு திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து சில கருத்துகளை நீதிபதிகள் உள்வாங்கி கொள்கிறார்கள். அந்தளவிற்கு வக்கீல்கள் திறமையாக செயல்படுகின்றனர்.

நீதிபதிகள் நேர்மையாகவும், நியாயத்தின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கிய பிறகு அந்த தீர்ப்பு குறித்து எங்கேயும் விளக்கி பேச முடியாது. ஆகையால் தீர்ப்பு வழங்கும்போது நன்கு ஆராய்ந்து வழங்க வேண்டும். நீதிபதிகளால் வழங்கப்படும் நீதி மக்களால் பேசப்படும் வகையில் இருக்க வேண்டும். நீதித்துறையில் இருக்கும் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி, வக்கீல் சங்க தலைவர்கள் ராஜாராம், தமிழ்செல்வன், சுப்புராயலு, வக்கீல் சங்க செயலாளர்கள் கே.வேலவன், சங்கரன், இளம்வழுதி, பன்னீர்செல்வம், வக்கீல் ஜி.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மோனிகா நன்றி கூறினார்.

Next Story