கோபால்பட்டி அருகே கூட்டுறவு சங்க செயலரை வங்கிக்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு பல்வேறு இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்


கோபால்பட்டி அருகே கூட்டுறவு சங்க செயலரை வங்கிக்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு பல்வேறு இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2018 3:45 AM IST (Updated: 28 March 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

கோபால்பட்டி அருகே உள்ள வி.மேட்டுப்பட்டியில் கூட்டுறவு சங்க செயலரை வங்கிக்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோபால்பட்டி,

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 486 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

இதில் 137 சங்கங்களுக்கு அடுத்த மாதம் 2–ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 2 ஆயிரத்து 624 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில், இயக்குனர்களை தேர்வு செய்வதற்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களின் பட்டியல் நேற்று மாலை ஒட்டப்பட்டது.

இதில் வி.மேட்டுப்பட்டி கூட்டுறவு வங்கியில் தேர்தல் நடத்தும் அலுவலர், பட்டியலை வெளியிடாமல் பிற்பகலில் வங்கியை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து சாணார்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மோகன் தலைமையிலான அந்த கட்சியினர் விளக்கம் கேட்பதற்காக கூட்டுறவு வங்கிக்கு சென்றனர்.

ஆனால் அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் இல்லாததால், செயலர் சுப்பிரமணியை வங்கிக்குள் வைத்து பூட்டி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் தொகுதி எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் ஆகியோர் தலைமையிலான தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்த சாணார்பட்டி சப்–இன்ஸ்பெக்டர் அபுதல்கா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி செயலரை மீட்டனர். கூட்டுறவு வங்கிக்குள் வைத்து செயலரை பூட்டியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் நொச்சியோடைப்பட்டி கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கூட்டுறவு வங்கி முன்பு நத்தம்–திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் நத்தம்–திண்டுக்கல் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கம்பிளியம்பட்டி கணவாய்பட்டி கூட்டுறவு வங்கியிலும் தேர்தல் முறைகேடு நடைபெறுவதாக கூறி கூட்டுறவு சங்கம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நத்தம் தாலுகா செந்துறையில் செயல்பட்டு வரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட அனைத்துக்கட்சி சார்பாக மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 11 மனுக்களை மட்டும் தேர்வு செய்து தேர்தல் அதிகாரி கூட்டுறவு சங்கத்தில் ஒட்டி உள்ளதாக கூறி, தேர்தல் அதிகாரிகளை கண்டித்து தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் பெட்ரோல் பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் இருந்து பாட்டிலை பிடுங்கிய நத்தம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

இதேபோல திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்த 11 வேட்பு மனுக்களை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்ற கட்சியினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டும் தேர்தல் அதிகாரி உரிய விளக்கம் அளிக்காததால், கூட்டுறவு சங்கம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்–பழனி சாலையில் உள்ள தபால் தந்தி ஊழியர் கூட்டுறவு பண்டக சாலை முன்பு, அந்த சங்கத்தினர் தேர்தல் அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ஏற்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை ஒட்டுவதற்கு இன்று (நேற்று) மாலை 5 மணி வரை நேரம் உண்டு.

ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் மதியம் 1 மணிக்கே இறுதி வேட்பாளர் பட்டியலை ஒட்டிவிட்டு சென்றுவிட்டார். இதில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பரிந்துரை செய்த 11 பேர் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்படும், என்றனர்.

ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்யாமல் தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கூட்டுறவு சங்கம் முன்பு திண்டு முற்றுகையிட்டனர்.

இதனை அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பழனி டாக்டர் கோபாலன் தெருவில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் போட்டியிட 40 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பாளர்களுக்கான பரிசீலனை நேற்று நடைபெற்றது. அப்போது வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளார்களை பரிசீலனைக்கு அனுமதிக்க தேர்தல் மேற்பார்வையாளார் முத்துக்குமார் மறுத்து விட்டார். இதனால் அங்கு கூடி இருந்த அனைத்து கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, வேட்பாளர்கள் பரிசீலனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Next Story