கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி–கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை


கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி–கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 28 March 2018 4:15 AM IST (Updated: 28 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 48). இவருடைய மனைவி தனலெட்சுமி (45). இந்நிலையில் தனலெட்சுமிக்கு, காரையூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த நல்லையா(30) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனலெட்சுமியின் கணவர் வீட்டில் இல்லாதபோது நல்லையாவும், தனலெட்சுமியும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இவர்களது கள்ளக்தொடர்பு குறித்து அறிந்த வெள்ளையன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனலெட்சுமி அவருடைய கள்ளக்காதலன் நல்லையா சேர்ந்து கடந்த 5.1.16–ந்தேதி வெள்ளையன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது தலையணையை வைத்து முகத்தை அமுக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.


பின்னர் தனலெட்சுமி தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் தனலெட்சுமியிடம் விசாரணை செய்தனர்.

இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் விசாரித்ததில் தனலெட்சுமியும் அவரது கள்ளக்காதலன் நல்லையாவும் சேர்ந்துதான் வெள்ளையனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காரையூர் போலீசார் தனலெட்சுமி, நல்லையா ஆகிய இருவரையும் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் வெள்ளையனை கொலை செய்த குற்றத்திற்காக தனலெட்சுமி, நல்லையா ஆகியோருக்கு தலா ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருட சிறையும், கூட்டு சதி திட்டம் தீட்டியதற்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 2 வருட சிறைதண்டனையும் அபராதமாக ரூ.ஆயிரமும், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இதனையடுத்து தனலெட்சுமி, நல்லையாவை ஆகிய 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜராகி வாதாடினார்.

Next Story