காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோ‌ஷம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோ‌ஷம்
x
தினத்தந்தி 28 March 2018 4:15 AM IST (Updated: 28 March 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோ‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. உதவி கலெக்டர் கே.எம்.சரயு முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கிய சிறிதுநேரத்தில் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:–

கீரனூர் கோவிந்தராஜ்:– கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும். வறட்சி நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும். கீரனூர் பெரியகுளம் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

அத்தாணி ராமசாமி:– கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வறட்சி அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய வறட்சி நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும்.

தங்கராஜ்:– சில இடங்களில் மின்வாரியத்தின் சார்பில் மீட்டர்கள் பொருத்தப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை காலதாமதம் செய்யாமல் நிறைவேற்றி தர வேண்டும்.

செல்லத்துரை:– இந்த ஆண்டு வறட்சி நிவாரணம் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீடுத்தொகை உரிய முறையில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொக்கலிங்கம்:– விவசாயிகளுக்கு அரசு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இந்த பிரச்னையில் கலெக்டர் நேரடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து:– பனைமரத்தின் அவசியத்தை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி, அதனை வெட்ட தடைவிதிக்க வேண்டும். புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடுகள் வழங்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தின் முடிவில் மாவட்ட கலெக்டர் கணேஷ் பேசுகையில், கோடை காலங்களில் நீரின் தேவையை குறைக்கும் வகையில், தமிழக அரசால் மானிய விலையில் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழக அரசால் செயல்படுத்தக்கூடிய விவசாய நலன் திட்டங்கள் குறித்து விவசாய பெருமக்கள் அதிகளவில் தெரிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, வேளாண்மை இணை இயக்குனர் ராஜகோபால், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோகரன், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அருணாச்சலம், அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story