1,542 பறக்கும் படைகள் அமைக்கப்படும் சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்


1,542 பறக்கும் படைகள் அமைக்கப்படும் சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 28 March 2018 4:00 AM IST (Updated: 28 March 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

1,542 பறக்கும் படைகள் அமைக்கப்படும் சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தலையொட்டி 1,542 பறக்கும் படைகள் அமைக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறினார்.

கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அதிகாரிகளுக்கு உத்தரவு


கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படும். இதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். இதற்கு விதிமுறைகளை வகுத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படுத்தாமல் பாகுபாடு இல்லாமல் அனைவரும் தேர்தல் பணியில் கலந்துகொள்ள வேண்டும். தேர்தலில் அனைவரும் பங்கேற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்த முறை தேர்தலில் ஓட்டுப்பதிவு 75 சதவீதத்தை தாண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

9 சதவீதம் அதிகரிப்பு


கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் 71.45 சதவீத ஓட்டுகள் பதிவாயின. 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 739 ஆக இருந்தது. தற்போது உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 4 கோடியே 96 லட்சத்து 82 ஆயிரத்து 351 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 52 லட்சத்து 5 ஆயிரத்து 820 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 44 லட்சத்து 71 ஆயிரத்து 979 பேரும் உள்ளனர். திருநங்கை வாக்காளர்கள் 4,552 பேர் உள்ளனர். இந்த திருநங்கைகள் எண்ணிக்கை கடந்த சட்டசபை தேர்தலின்போது 2,100 ஆக இருந்தது. 18 வயதில் இருந்து 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 15.42 லட்சம் ஆகும். இது கடந்த சட்டசபை தேர்தலின்போது 7.18 லட்சமாக இருந்தது.

யாருக்கு வாக்களித்தோம்

இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 1.16 சதவீதத்தில் இருந்து 2.20 ஆக உயர்ந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பாலின விகிதம் 958-ல் இருந்து 972 ஆக உயர்ந்துள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் 52 ஆயிரத்து 34-ல் இருந்து 56 ஆயிரத்து 696 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதலாக 1,850 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

56 ஆயிரத்து 696 வாக்குச்சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அனைத்து வாக்கு எந்திரங்களிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதியுள்ள வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்படும். மொத்தம் 76 ஆயிரத்து 110 வி.வி.பேட் எந்திரங்கள், 87 ஆயிரத்து 819 வாக்கு எந்திரங்கள், 73 ஆயிரத்து 185 வாக்கு எந்திரத்தை கட்டுப்படுத்தும் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

பறக்கும் படைகள்

தேர்தலை நடத்த மொத்தம் 3 லட்சத்து 56 ஆயிரத்து 552 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. இதை கண்காணிக்க 1,361 அதிகாரிகள் குழுக்கள், 1,503 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 1,542 பறக்கும் படைகள், 1,097 சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்தில் நிலுவையில் உள்ள 42 ஆயிரத்து 815 ஜாமீனில் விடுவிக்க முடியாத வாரண்டுகளை செயல்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். சட்டவிரோதமாக ஆயுதங்கள், மதுபானங்கள் கடத்தல் ஆகியவற்றை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கர்நாடக சட்டசபை தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story