கர்நாடக சட்டசபை தேர்தலில் லிங்காயத்துக்கு தனி மத அங்கீகார முடிவில் அரசியல் இல்லை பரமேஸ்வர் பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் லிங்காயத்துக்கு தனி மத அங்கீகார முடிவில் அரசியல் இல்லை பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 28 March 2018 3:15 AM IST (Updated: 28 March 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவில் அரசியல் இல்லை என்று பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவில் அரசியல் இல்லை என்று பரமேஸ்வர் கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசியல் இல்லை

லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவில் அரசியல் இல்லை. இதனால் தேர்தலில் அதிக அரசியல் ஆதாயம் வரும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. தேர்தலில் ஆதாயம் பெறவே சித்தராமையா அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறுவது தவறு. 2013-ம் ஆண்டு லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை மத்திய அரசு நிராகரித்தது.

அதே போல் லிங்காயத் சமூகத்தின் கோரிக்கையை ஏற்று இப்போது காங்கிரஸ் அரசு அதை முன்வைத்து பரிந்துரை செய்துள்ளது. இதில் அரசியல் இருப்பதாக கூறுவது சரியல்ல. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தங்களின் கோரிக்கை நிறைவேறியதாக லிங்காயத் சமூகத்தினர் கருதினால் அதன் மூலம் காங்கிரசுக்கு ஓரளவுக்கு பலன் கிடைக்கும். மடாதிபதிகளுக்கு அரசியல் தொடர்பு கிடையாது.

தொங்கு சட்டசபை


இந்த கட்சிக்கு தான் ஓட்டுப்போட வேண்டும் என்று மடாதிபதிகள் அவர்களின் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்துவது இல்லை. மடாதிபதிகளிடம் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் ஆசி பெறுகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களை போல் தான் அமித்ஷாவும் மடாதிபதிகளிடம் ஆசி பெற்று இருப்பார். பொதுவாக ஆளும் அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை மக்களிடம் இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் கர்நாடகத்தில் அரசுக்கு பெரிய அளவுக்கு எதிர்ப்பு அலை இல்லை.

அதனால் காங்கிரஸ் உறுதியாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேலை செய்யவில்லை என்று சில தனிப்பட்ட நபர்களுக்கு அரசின் செயல்பாடுகளில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்று காங்கிரஸ் கருதவில்லை. ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணியால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

வெற்றி வாய்ப்பு

காங்கிரசில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள அனைவருக்கும் டிக்கெட் கொடுப்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். வெற்றி வாய்ப்பு தான் முக்கியம். சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுவார். விஜயாப்புரா அல்லது பாகல்கோட்டையில் அவர் போட்டியிடுவதாக வெளியான தகவல் தவறானது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story