கோலார் மாவட்டத்தில் தேர்தலை நேர்மையாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்


கோலார் மாவட்டத்தில் தேர்தலை நேர்மையாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 March 2018 3:33 AM IST (Updated: 28 March 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

கோலார் மாவட்டத்தில் தேர்தலை நேர்மையாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சத்தியவதி தெரிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டத்தில் தேர்தலை நேர்மையாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சத்தியவதி தெரிவித்துள்ளார்.

கோலார் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சத்தியவதி நேற்று காலை தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1,568 வாக்குச்சாவடிகள்

கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கோலார் மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், மாலூர், பங்காருபேட்டை, கோலார் தங்கவயல் ஆகியவை தனித்தொகுதியாகும். கோலார் மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 83 ஆயிரத்து 967 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 1,568 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் 20 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சீனிவாசப்பூர், கோலார், மாலூர் சட்டசபை தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக நடக்கும் என்று தகவல்கள் வந்துள்ளதால், அங்கு கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஒத்துழைக்க வேண்டும்

கோலார் மாவட்டத்தில் தேர்தலை நேர்மையான முறையில் நடத்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மாலூர், முல்பாகல் பகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தி வரும் 2 இலவச உணவு விடுதிகளை மூட உத்தரவிட்டுள்ளேன். மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் பேனர்கள், சுவரொட்டிகளை அகற்றவும், சுவர் விளம்பரங்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். 24 மணி நேரத்திற்குள் இதனை அதிகாரிகள் முடிக்க வேண்டும். இல்லை என்றால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் கூடுதல் கலெக்டர் வித்யாகுமாரி இருந்தார்.

Next Story