திருச்சி வயர்லஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன


திருச்சி வயர்லஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன
x
தினத்தந்தி 28 March 2018 4:21 AM IST (Updated: 28 March 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் வருகையையொட்டி திருச்சி வயர்லஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

திருச்சி,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (புதன்கிழமை) காலை விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காலை 11.15 மணிக்கு காரில் புறப்பட்டு வயர்லஸ் சாலை, உடையான்பட்டி ரெயில்வே கேட் வழியாக கே. சாத்தனூர் அய்மான் மகளிர் கல்லூரிக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

கவர்னர் கார் செல்லும் பாதையான வயர்லஸ் சாலையில் நேற்று மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கடைகள் முன் போடப்பட்டு இருந்த கீற்று கொட்டகைகள், தாழ்வாரங்களை அகற்றி அப்புறப்படுத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த சாலையில் குப்பை மற்றும் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வயர்லஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி சார்பில் ஏற்கனவே பல முறை நோட்டீசுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திக்கொள்ள முன்வராததால் தற்போது மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

Next Story