காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து விவசாயிகள் தர்ணா


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து விவசாயிகள் தர்ணா
x
தினத்தந்தி 28 March 2018 11:00 PM GMT (Updated: 28 March 2018 7:57 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து தரையில் படுத்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் பேசினார். அப்போது விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். பின்னர் கூட்டத்தை புறக்கணித்து கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஒருசில விவசாயிகள் கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர். அப்போது காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் தனபாலன் தலைமையில் விவசாயிகள் உள்ளே சென்று, அங்கு அமர்ந்திருந்த விவசாயிகளை வெளியில் வரும்படி அழைத்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கூட்ட அரங்கைவிட்டு வெளியே சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே கூட்டம் நடைபெறாமலேயே முடிவடைந்தது. இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்காவிட்டால், தமிழக அரசு மத்திய அரசு மீது உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி: நாகை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களை பொதுப்பணித்துறை மூலம் வருகிற மே மாதத்திற்குள் தூர்வார வேண்டும். அனைத்து விவசாயிகளின் விவசாய கடன்களை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்.

புதுமண்ணியார் பாசன சங்க தலைவர் கோதண்டராமன்: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். புதுமண்ணியாற்றில் உள்ள செடி, கொடிகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும். கிட்டி அணை இடது கரையில் உள்ள உடைப்பினால் உப்புநீர் உள்ளே புகுந்து விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே அதனை உடனே சீரமைக்க வேண்டும்.

காவிரிடெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் குரு.கோபிகணேசன்: கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் செய்யப்படும் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது. 

Next Story