காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிக்கிறது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிக்கிறது
x
தினத்தந்தி 29 March 2018 4:00 AM IST (Updated: 29 March 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

நாகர்கோவில்,

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரண நிதி மிகவும் குறைவாக உள்ளது. ஒகி புயலில் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்தினருக்கு முழு அளவில் நிவாரணம் வழங்க வேண்டும்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற ரப்பர் குமரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. ஆனால் ரப்பர் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. எனவே மத்திய- மாநில அரசுகள் ரப்பர் பூங்கா அமைத்து, உரிய விலை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல்

தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

அய்யா வைகுண்டர் சமூக நீதிக்காக பாடுபட்டவர். பெண் அடிமைத்தனத்தை போக்க பெண் உரிமைக்கு கடுமையாக போராடி, பல எதிர்ப்புகளை சந்தித்தார். அய்யா வைகுண்டரை நாடார் சமுதாய மக்கள் போற்றி வணங்குகிறார்கள். சாமிதோப்பு அய்யா வைகுண்டபதியை தமிழக இந்து அறநிலையத்துறை எடுப்பது ஏற்புடையதல்ல. அது நாடார் மக்களை அவமதிக்கும் செயல். கேரள அரசு சார்பில் அய்யாவை கொண்டாடுகிறார்கள். அவர் பெயரில் விருது வழங்குகிறார்கள். அந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

பேச்சுவார்த்தை

கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் குறித்து மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்படும் மக்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களிடம் மட்டும் வேட்பு மனு வாங்கிவிட்டு, மற்றவர்களை நிராகரிக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலை ஆகும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் தாமிரபரணி ஆறு மாசுபட்டிருக்கிறது. ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை அந்த ஆலை உறிஞ்சுகிறது. நச்சு வெளியேற்றத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அதனால்தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் வேண்டாம் என்கிறார்கள். எனவே அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்துக்கு ஏமாற்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நமது உரிமை பறிக்கப்பட்டு விட்டது. அதிகாரம் இல்லாத கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துவதால் ஏமாற்றமே. மத்திய அரசு உத்தரவில்தான் தமிழக அரசு செயல்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இந்த ஆட்சி மத்திய அரசு மனது வைக்கும் வரையில் நீடிக்கும்.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். 

Next Story