பரமக்குடி அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டிய தினகரன் அணியினர்


பரமக்குடி அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டிய தினகரன் அணியினர்
x
தினத்தந்தி 29 March 2018 4:15 AM IST (Updated: 29 March 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

வேட்புமனு ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என தெரியாததால் ஆத்திரம் அடைந்த டி.டி.வி. தினகரன் அணியினர் பரமக்குடி அருகே கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை பூட்டினர்.

பரமக்குடி,

பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்டது அரியனேந்தல் கிராமம். இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் நிர்வாக குழுவிற்கான கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட மொத்தம் 27 பேர் வேட்புமனு செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு 11 பேர் கொண்ட பட்டியல் முன்பக்க சுவரில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த 9 பேர் அந்த சங்கத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஒரு பெண் அலுவலக உதவியாளர் மட்டும் இருந்துள்ளார். அவரிடம் எங்கள் வேட்புமனு என்ன ஆனது ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என கேட்டுள்ளனர். அதற்கு அவர் எனக்கு தெரியாது. 11 பேரின் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டுஉள்ளது. அங்கு சென்று பாருங்கள் என்று கூறினாராம்.

அந்த பெயர் பட்டியலை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 9 பேரில் யாருடைய பெயரும் இடம் பெறாமல் இருந்தது. உடனே அவர்கள் தினகரன் அணியின் பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் அவர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் மணல் சந்திரசேகர், செயலாளர் நாகராஜன், மாரிச்செல்வம், சரவணத்தேவன் மற்றும் ஆதரவாளர்களுடன் அரியனேந்தல் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று எங்கள் அணியினர் அளித்த வேட்புமனு என்ன ஆனது, ஏன் நிராகரித்தீர்கள் என்று கேட்டுள்ளார். மேலும் அந்த சங்கத்தின் செயலாளரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் உரிய பதில் கூறவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பெண் ஊழியரை வெளியேற்றிவிட்டு கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டுப்போட்டு பூட்டினர். இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த பின்னர் தினகரன் அணியினர் பூட்டிய அலுவலகத்தை மீண்டும் திறந்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story