காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 29 March 2018 4:15 AM IST (Updated: 29 March 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாமக்கல்லில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

அப்பாவு:- குடிநீருக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு மேல் கொக்கராயன்பேட்டை வரை ஆற்றில் இருந்து பம்புசெட்டுகள் மூலம் சுமார் ¼ டி.எம்.சி தண்ணீர் திருடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திருட்டை தடுக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், ஆனால் இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கலெக்டர்:- வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி, பம்புசெட் மின்இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரியசாமி:- ராஜவாய்க்கால் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. இங்கு கிணறுகள் இல்லை, இப்போது கிணறுகள் புதிதாக வெட்டினாலும் உடனடியாக மின்இணைப்பு பெறமுடியாது. இதனால் ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழைப்பயிரை காப்பாற்ற, தொடர்ந்து 5 நாட்களுக்கு தண்ணீர் விடவேண்டும். குடிநீருக்கு திறக்கப்பட்ட தண்ணீர் பம்புசெட் வைத்து திருடப்பட்டு வரும்போது, ராஜவாய்க்காலில் தண்ணீர் விடாதது பாரபட்சமான செயல்.

கலெக்டர்:- காவிரி ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாசனத்துக்கு தண்ணீர் திறக்கமுடியாது.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி தங்கவேல், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு அறிவிக்கும் ஆதார விலையை வழங்குவது இல்லை. 24 தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1,433 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளன.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை ரூ.65 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு தரவேண்டிய பணத்தை வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. இதனால் அரசு அறிவித்த விலையை வழங்க மறுக்கும், தனியார் சர்க்கரை ஆலை மீது வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இவரை தொடர்ந்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் நல்லாக்கவுண்டர், 12 மாவட்டங்களின் விவசாயம், 20 மாவட்டங்களின் குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு. எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து செயல்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, 192 டி.எம்.சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்த அவர், விவசாயிகள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். இதைதொடர்ந்து சுமார் 90 சதவீத விவசாயிகள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். பின்னர் கூட்ட அரங்கிற்கு வெளியில் திரண்ட விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் சுமார் 5 நிமிடம் நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், விவசாயிகளை கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியில் அழைத்துச்சென்றனர்.

இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், வேளாண்மை இணை இயக்குனர் கந்தசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story