ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு குறித்து அரசு செயலாளர்- கலெக்டர் ஆய்வு: அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்


ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு குறித்து அரசு செயலாளர்- கலெக்டர் ஆய்வு: அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்
x
தினத்தந்தி 29 March 2018 4:30 AM IST (Updated: 29 March 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு குறித்து அரசு செயலாளர் மற்றும் கலெக்டர் ஆய்வு செய்து வருகிறார்கள் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஈரோட்டில் நேற்று கூறினார்.

ஈரோடு,

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நியூட்ரினோ, ஓ.என்.ஜி.சி. ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. அந்த திட்டங்கள் அமையும் இடங்களில் உள்ள மக்களிடம் இதுபற்றி கருத்து கேட்க தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு அறிக்கை தயார் செய்து வழங்கிய பின்னர் அதன் அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையால் என்ன பாதிப்பு என்பது குறித்து அரசு செயலாளர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.100 கோடி நிதி வழங்கி உள்ளனர்.

அந்த நிதி தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.135 கோடியாக உள்ளது. அதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு தேவையானவற்றை செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் காற்று மாசுபாடு என்பது எந்த பகுதியிலும் இல்லை. அவைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை கோயம்பேட்டில் மட்டும் காற்று மாசுபாடு அவ்வப்போது ஏற்படுகிறது. அதுவும் சிறிது நேரத்தில் சரியாகிவிடுகிறது. ஆலைகளில் இருந்து சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் புகாரின் அடிப்படையில் 68 சாய- சலவை ஆலைகள் மூடப்பட்டு உள்ளன.

நாமக்கல், எடப்பாடி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் சாய- சலவை ஆலைகளை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடித்து அகற்ற உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் அங்கு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அனைத்து ஆலைகளும் இடித்து அகற்றப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். 

Next Story