தேர்தல் நடத்தை விதிகள் அமல் எதிரொலி மத்திய- மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் திடீர் கட்டுப்பாடு


தேர்தல் நடத்தை விதிகள் அமல் எதிரொலி மத்திய- மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் திடீர் கட்டுப்பாடு
x
தினத்தந்தி 29 March 2018 3:00 AM IST (Updated: 29 March 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு மத்திய- மாநில அரசுகள் நிதி ஒதுக்கக்கூடாது என கட்டுப்பாடு விதித்து தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு மத்திய- மாநில அரசுகள் நிதி ஒதுக்கக்கூடாது என கட்டுப்பாடு விதித்து தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள்

இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 12-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி நேற்று முன்தினம் முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர், திட்ட செயலாக்க செயலாளர், கர்நாடக தலைமை செயலாளர் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறி இருப்பதாவது:-

நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது.

ஏற்கனவே வளர்ச்சி பணிகளுக்கு பணி ஆணை கொடுக்கப்பட்டு அந்த பணிகள் இன்னும் தொடங்காமல் இருந்ததால் அத்தகைய பணிகளை தற்போது தொடங்கக் கூடாது. இந்த திட்ட பணிகளை தேர்தல் முடிவடைந்த பின்னரே தொடங்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளுக்கு எந்த தடையும் இல்லை.

தடை இல்லை

செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய தடை இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்குரிய பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தால் அந்த பணிகளை தொடங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முறைகேடுகளை தடுக்க...

தேர்தல் தேதியை மாற்றும் திட்டம் இல்லை. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேதியில் தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பள்ளி-கல்லூரி ஆண்டு தேர்வுகள், தேர்வு முடிவுகள் வெளியிடுதல், பண்டிகைகள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்களை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிக்பள்ளாப்பூரில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பொதுமக்களுக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதை தடுத்து நிறுத்தியுள்ளோம். சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதாக ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

எந்த புகாரும் வரவில்லை

தேவரஹிப்பரகியில் பா.ஜனதாவை சேர்ந்த ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி பெண்களுக்கு சேலை வினியோகம் செய்வதாக வந்த தகவலை அடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டது. அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமித்ஷா கர்நாடகத்தில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தபோது சில வாக்குறுதிகளை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதுபற்றி எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பணம் தவறாக பயன்படுத்துவது தெரியவந்தால் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. போலீஸ் ஆலோசகராக கெம்பையா நியமிக்கப்பட்டதில் தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

துணைவேந்தர்களை நியமிக்க முடியாது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க முடியாது. மாநில அரசில் முன்தேதியிட்டு பல்வேறு நியமனங்கள் செய்யப்படுவதாக புகார்கள் வந்தால் அதுபற்றி விசாரிக்கப்படும். அரசின் திட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் இரவோடு இரவாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி புகார் வந்தால் உரிய விசாரணை நடத்தப்படும்.

அரசின் அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டு உள்ளன. வாக்காளர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

Next Story