உடலில் பெட்ரோல் ஊற்றி கணவர் தீக்குளிப்பு


உடலில் பெட்ரோல் ஊற்றி கணவர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 30 March 2018 4:00 AM IST (Updated: 30 March 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியையாக பணியாற்றும் மனைவிக்கு பணிநிரந்தரம் கிடைக்காததால் பள்ளிக்கூட நிர்வாகத்தை கண்டித்து அவருடைய கணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

மதுரை கூடல்நகர் பக்கம் உள்ள தினமணிநகரை சேர்ந்தவர் ஜேசுராஜா(வயது 38). ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்துள்ளார். வேலை ஏதும் கிடைக்கவில்லை.

இவருடைய மனைவி லியோ ஜெசிந்தா (35). இவர் காமராஜர் சாலையில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஆனாலும் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றியபோதிலும் பணிநிரந்தரம் ஆகவில்லை.

தனக்கும் வேலை ஏதும் கிடைக்கவில்லை, மனைவிக்கும் பணிநிரந்தரம் ஆகவில்லை என ஜேசுராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஜேசுராஜ் நேற்று தனது மோட்டார்சைக்கிளில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் வந்தார்.

அங்கு மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் மோட்டார்சைக்கிள் டேங்க்கில் இருந்த பெட்ரோலை பிடித்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீ அவரது உடலில் பற்றி எரிந்தது. அலறல் சத்தத்துடன் அங்கும் இங்கும் ஓடினார். சிறிதுநேரத்தில் அவர் உடல்கருகி கீழே விழுந்தார்.

நேற்று அரசு விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதியில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. அந்த சமயத்தில் அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

உடல் கருகிய நிலையில் ஜேசுராஜாவை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story