விராலிமலையில் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 70 பேர் காயம்


விராலிமலையில் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 70 பேர் காயம்
x
தினத்தந்தி 30 March 2018 4:30 AM IST (Updated: 30 March 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 70 பேர் காயமடைந்தனர். பிடிபடாத மாட்டின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டமரத்தான் கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த ஜல்லிக்கட்டு பேரவை, விழா கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டை விராலிமலை அம்மன்குளத்தில் நடத்துவதற்காக வாடிவாசல் அமைப்பது, தென்னைநார்கள் பரப்புவது, பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் காளைகள் சென்று விடாமல் இருக்க கம்பிகள் கட்டுவது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட கலெக்டர் கணேஷ் அனுமதி வழங்கினார். இதையடுத்து நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. முதலில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் கொண்டு வந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் 327 மாடுபிடி வீரர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டை நேற்று காலை 7 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்க வில்லை. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, அலங்காநல்லூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 2000 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

துள்ளிக்குதித்தும், சீறிப்பாய்ந்தும் வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. சில காளைகள் வீரர்களை அருகில் விடாமல் கலங்கடித்தது. ஒரு சில காளைகள் வீரர்களை முட்டி தள்ளி விட்டு ஆக்ரோஷமாக துள்ளி குதித்து ஓடியது.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் விராலிமலை அருகே உள்ள பாரப்பட்டியை சேர்ந்த கருப்பையா (வயது 60), முல்லையூரை சேர்ந்த மாணிக்கம் (29), விராலிமலையை சேர்ந்த ராமசந்திரன் (30), ஆகாஷ் (24). சிவா (22) உள்பட 70 மாடுபிடிவீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் வீரர்களிடம் பிடிபடாத சிறந்த காளைக்கு கார் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கார் பரிசு பிடிபடாத மாட்டின் உரிமையாளர் திண்டுக்கலை சேர்ந்த செல்வத்துக்கு கிடைத்தது. சிறந்த மாடுபிடி வீராக தேர்வு செய்யப்பட்ட திருச்சியை சேர்ந்த ராஜசேகருக்கு புல்லட் மோட்டார் சைக்கிளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் 5 மோட்டார் சைக்கிள்கள், தங்க, வெள்ளி நாணயங்கள், பிரிட்ஜ், பீரோக்கள், சைக்கிள்கள், கட்டில், கிரைண்டர், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள் போன்ற பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

ஜல்லிக்கட்டை கடம்பூர் ராஜீ, வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி உள்பட 10 அமைச்சர்கள், கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் வைரமுத்து, அரிமளம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திலகர், கடையக்குடி ஊராட்சி செயலாளர் இன்பவள்ளிதிலகர், விராலிமலை ஒன்றிய முன்னாள் துணை தலைவரும், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளருமான திருமூர்த்தி, ஒன்றிய இணைச்செயலாளர் கலைச்செல்வி கருப்பையா, மாவட்ட அம்மாபேரவை துணைச்செயலாளர் பன்னீர், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் களமாவூர் பாலசுப்பிரமணியன். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்துசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விளாப்பட்டி சந்திரசேகரன், மாவட்ட பிரதிநிதிகள் பாலாண்டாம்பட்டி ராமன், பிலிப்பட்டி அறிவழகன், ஒன்றிய அவைத்தலைவர் மருதை, ஒன்றிய பொருளாளர் சின்னத்துரை, மருதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சுப.ரெங்கசாமி, மாங்குடி ஊராட்சி செயலாளரும், கூட்டுறவு வங்கி இயக்குனருமான பழனியப்பன், அரசு முதல்நிலை ஒப்பந்ததாரர் விளாப்பட்டி மாரிமுத்து, தொழிலதிபர் சஞ்சீவிராயர்கோவில் குமார் என்ற பாலகிருஷ்ணன், ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளர் செபஸ்தியான், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விளாப்பட்டி சோலை மற்றும் திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர்.

திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலெட்சுமி தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story