சங்கரன்கோவிலில் அமைச்சர், கலெக்டரை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்


சங்கரன்கோவிலில் அமைச்சர், கலெக்டரை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 30 March 2018 2:45 AM IST (Updated: 30 March 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் அமைச்சர், கலெக்டரை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில் அமைச்சர், கலெக்டரை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

ஊரணி சுகாதார கேடு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் அமைந்துள்ளது திருநீல கண்ட ஊரணி. இந்த ஊரணியில் சுகாதார கேடு அதிகமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் நகரசபையில் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சங்கரன்கோவில் காயிதே மில்லத் தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7½ லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதை திறந்து வைக்க அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் வந்தனர். இதையறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அந்த பகுதிக்கு திரண்டு வந்தனர்.

முற்றுகையிட்டு போராட்டம்

திருநீலகண்ட ஊரணி அருகே அங்கன்வாடி மையம் அமைந்தால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது என்று கூறி அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். நகர செயலாளர் காஜா மைதீன், நகர தலைவர் உசேன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சேனா என்ற செய்யது இப்ராகிம் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க.வினருக்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தினர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 10 நாட்களுக்குள் ஊரணியை சுத்தம் செய்து சுகாதார சீர்கேட்டை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தின் அருகில் ஊரணியின் கைப்பிடி சுவர் பாதுகாப்பற்ற முறையில் இருந்தது. இந்த சுவரை உயர்த்தி கட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஏப்ரல் 10-ந் தேதிக்குள் ஊரணியை சுத்தம் செய்யாவிட்டால் இப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story