சாலை விரிவாக்க பணி பாதியில் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி


சாலை விரிவாக்க பணி பாதியில் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 30 March 2018 4:15 AM IST (Updated: 30 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர்-முத்துலாபுரம் சாலை விரிவாக்க பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், சாலையோர பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சின்னமனூர்,

சின்னமனூர்-முத்துலாபுரம் இடையேயான மாநில நெடுஞ்சாலை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த சாலையில் தினமும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. ஆனால் சாலை குறுகியதாக இருந்ததால், வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமம் ஏற்பட்டது. அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து முதல் கட்டமாக கடந்த ஆண்டு அந்த சாலையில் சின்னமனூரில் இருந்து ஊத்துப்பட்டி பிரிவு கருங்காட்டான்குளம் வரை அகலப்படுத்தும் பணி முடிந்தது.

அதன் பின்பு கருங்காட்டான்குளத்தில் இருந்து முத்துலாபுரம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. இதற்காக கருங்காட்டான்குளம் அருகேயும், முத்துலாபுரத்திலும் தரைப்பாலங்கள் அகற்றப்பட்டன. அந்த பகுதியில் புதிய பாலங்கள் கட்டும் பணிக்காக பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டது. அங்கு பாலம் வேலை நடைபெறுவதற்கு எந்த அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. மேலும் சாலையோரத்தில் அகலப்படுத்துவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி கடந்த ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த சாலையில் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட சாலை பணிகளை மீண்டும் தொடங்கி, விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story