தி.மு.க. பிரமுகர் மகன் தற்கொலை காதல் பிரச்சினையா? போலீசார் விசாரணை


தி.மு.க. பிரமுகர் மகன் தற்கொலை காதல் பிரச்சினையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 March 2018 3:45 AM IST (Updated: 30 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பிரமுகர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி புத்தூர் வடக்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். தி.மு.க.வைச் சேர்ந்த இவர் திருச்சி 55-வது வார்டு வட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரது மகன் தீபன் (வயது 20). இவர் சமயபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து தீபன் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் இரவில் ஒரு அறைக்கு சென்று திடீரென்று கதவை அடைத்து கொண்டு உள்புறமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டார். நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை வெகு நேரமாக தட்டியும் அவர் திறக்கவில்லை. பின்னர் அவர்கள் கடப்பாரையால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.

அப்போது உள்ளே மின் விசிறியின் கொக்கியில் கயிற்றால் தீபன் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலையில் அங்கு அவரது உடலை பார்த்து சக மாணவர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து தீபன் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தீபனுக்கு கடந்த 3 மாதங்களாக அல்சர் நோய் இருந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த தீபன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறினர். உடல் நலக்குறைவால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story