பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா பேட்டி


பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா பேட்டி
x
தினத்தந்தி 30 March 2018 2:30 AM IST (Updated: 30 March 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா கூறினார்.

தூத்துக்குடி,

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா கூறினார்.

போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா நேற்று காலை அ.குமரெட்டியபுரம் கிராமத்துக்கு வந்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

மூட வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்து உள்ளது. இது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அ.குமரெட்டியபுரம் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகையால் ஆலையை மூட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொழிற்சாலைகளுக்கு எதிரி கிடையாது. ஆனால் மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு இன்னும் மவுனம் சாதித்து வருகிறது. ஆகையால் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும்.

காவிரி மேலாண்மை வாரியம்

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் புறந்தள்ளி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு முறையீடு செய்யலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறது. ஆகையால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அ.தி.மு.க. எம்.பி.க்கள் தற்போது பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஒரு நாடகமே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைவரும் போராட வேண்டும். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய வேண்டும்.

கர்நாடகாவில் தேர்தல் நடைபெற இருப்பதால், பா.ஜனதா அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் உள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர், அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து பேசி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். பா.ஜனதாவுக்கு தமிழ்நாட்டில் வாக்கு வங்கி இல்லை. இதனால் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்க பார்க்கிறது. அதே நேரத்தில் அபாயகரமான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி சொல்வதையே செய்து வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தும்.

இவ்வாறு யுவராஜா கூறினார்.

Next Story