கடன் தொல்லை காரணமாக சாப்பாட்டில் விஷம் கலந்து 3 குழந்தைகளுக்கு கொடுத்த தொழிலாளி


கடன் தொல்லை காரணமாக சாப்பாட்டில் விஷம் கலந்து 3 குழந்தைகளுக்கு கொடுத்த தொழிலாளி
x
தினத்தந்தி 30 March 2018 4:15 AM IST (Updated: 30 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருப்பனந்தாளில், கடன் தொல்லை காரணமாக சாப்பாட்டில் விஷம் கலந்து தனது மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் கூலித்தொழிலாளி. 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளை அடுத்த பாலாகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 40) விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மாலதி என்ற மனைவியும் மாதேஷ்(10), சந்தோஷ்(7), சரண்யா(3) என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் மாதேஷ் 6-ம் வகுப்பும், சந்தோஷ் 2-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குடும்ப செலவிற்காக சரவணன் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை அவரால் திரும்ப செலுத்த இயலவில்லை. சரவணனுக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி மாலதி கணவருடன் கோபித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதி மாதா கோவில் தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மூன்று பிள்ளைகளையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.

நேற்று சரவணன் தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி மாலதியிடம் பேசி மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வீட்டிற்கு அழைத்துள்ளார். இதற்கு மாலதி மறுத்து விட்டார். இதனைத்தொடர்ந்து தனது குழந்தைகளுக்கு ஹோட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக கூறி 3 குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

நேராக தனது வீட்டிற்கு மூன்று குழந்தைகளையும் அழைத்துச்சென்ற சரவணன். அங்கு ஏற்கனவே தான் தயாராக செய்து வைத்து இருந்த கோழிக்குழம்பில் விஷத்தை கலந்து அதை சாப்பாட்டில் ஊற்றி மூன்று பிள்ளைகளுக்கும் சாப்பிட கொடுத்தார். பின்னர் தானும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டார்.

சிறிது நேரத்தில் மயக்கமடைந்த நான்கு பேரையும் அக்கம், பக்கத்தினர் பார்த்து சிகிச்சைக்காக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்கள் நான்கு பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட போலீசார் மருத்துவமனைக்கு வந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் 4 பேரையும் பார்வையிட்டனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கலந்த சாப்பாட்டை கொடுத்து விட்டு தானும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்்தி உள்ளது. 

Next Story