பூ வியாபாரி வீட்டின் அருகே கிடந்த 100-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகள்


பூ வியாபாரி வீட்டின் அருகே கிடந்த 100-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகள்
x
தினத்தந்தி 30 March 2018 4:30 AM IST (Updated: 30 March 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

பூ வியாபாரி வீட்டின் அருகே 100-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகள் கிடந்தன. அவற்றை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து அவை காப்புகாட்டில் விடப்பட்டன.

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 45). இவர், குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீடு ஓட்டு வீடு. இவரது வீட்டை ஒட்டியபடி திண்ணை உள்ளது. இந்த திண்ணையில் ஆங்காங்கே துளைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலையில் திண்ணைக்கு அருகிலேயே பாம்பு குட்டிகள் ஆங்காங்கே இருந்துள்ளது. அப்போது வீட்டிற்கு வெளியே வந்த கஜேந்திரனின் மகள் சுதா இதனை பார்த்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கஜேந்திரன் வெளியே வந்து பார்த்தபோது திண்ணை துளைகளில் இருந்து பாம்பு குட்டிகள் வெளியே வந்தன. இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் தலைமையில், உதவி நிலைய அலுவலர் மூர்த்தி, தீயணைப்பு வீரர்கள் முத்துராஜா, சுரேஷ், சதீஷ் ஆகியோர் நேரில் சென்று பார்த்துள்ளனர்.

பின்னர் அவர்கள், ஆங்காங்கே உலாவிக் கொண்டிருந்த பாம்பு குட்டிகளை பிடித்து பையில் போட்டனர். மேலும் திண்ணை துளைகளை உடைத்து உள்ளிருந்த பாம்பு குட்டிகளையும், பாம்பு முட்டை குவியலையும் பையில் போட்டனர். முட்டை குவியலில் இருந்து பாம்பு குட்டிகள் வந்த வண்ணம் இருந்தது. இதனை அக்கம் பக்கத்தினர் திரளாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகள் இருந்தன. மதிய வேளையில் மீண்டும் அந்த திண்ணை துளைகளில் இருந்து பாம்பு குட்டிகள் வருவதாக வந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மீண்டும் சென்று 4 பாம்பு குட்டிகளை பிடித்தனர். அனைத்து பாம்பு குட்டிகள் மோர்தானா காப்பு காடுகள் பகுதியில் விடப்பட்டன. அந்த பாம்பு குட்டிகள் சாரைப்பாம்பு வகையை சேர்ந்தது எனவும், ஓரிரு நாட்களில் தான் முட்டைகளில் இருந்து பாம்பு குட்டிகள் வெளிவந்துள்ளது எனவும், அவை 11 செ.மீ. முதல் 21 செ.மீ. நீளம் வரை இருந்தன என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். 

Next Story