டிரைவரின் கழுத்தை அறுத்து கார் கடத்திய வழக்கில் 2 பேர் கைது


டிரைவரின் கழுத்தை அறுத்து கார் கடத்திய வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 March 2018 3:45 AM IST (Updated: 30 March 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

டிரைவரின் கழுத்தை அறுத்து கார் கடத்திய வழக்கில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி,

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் கிரீஸ். கார் டிரைவரான இவர், பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனிக்கு ஊழியர்களை காரில் அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி நள்ளிரவு ஊழியர்களை இறக்கிவிட்டு சில்க்போர்டு என்ற இடத்தில் வந்தபோது 2 பேர் காரை நிறுத்தி ‘லிப்ட்’ கேட்டு வழியில் இறங்கி கொள்வதாக கூறினர்.

இதனையடுத்து கிரீஸ், அவர்கள் 2 பேரையும் காரில் ஏற்றிக்கொண்டார். சிறிது தூரம் சென்றபோது அவர்கள் திடீரென கிரீசின் கழுத்தில் கத்தியை வைத்து வி.கோட்டா செல்லுமாறு கூறினர். அதன்படி, வி.கோட்டா வந்தபோது மற்றொருவர் காரில் ஏறினார். இவர்கள் 3 பேருடன் தமிழக எல்லையான வீரானம் பகுதிக்கு வந்தபோது அங்குள்ள சோதனை சாவடி அருகே காரை நிறுத்தும்படி கூறினர். அதைத் தொடர்ந்து கார் நிறுத்தப்பட்டது. இதனைடுத்து அவர்கள், கிரீசை கத்தியால் அறுத்துவிட்டு காரை கடத்தி சென்றனர். அப்போது அவ்வழியாக வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின் இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்றினர்.

2 பேர் கைது

அதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், கார்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிய போது, அந்த கார் கடந்த 11-ந் தேதி நெக்குந்தி டோல்கேட் அருகே கேட்பாரற்று நின்றிருந்தது. இதனையடுத்து போலீசார் காரை கைப்பற்றினர்.

காரில் ரத்தக்கரை இருந்ததால் சோதனை சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது 2 பேர் காரை விட்டு இறங்கி சென்றது தெரியவந்தது. அவர்கள் ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பரத், சிவா என்பதும் தெரியவந்தது. அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். 

Next Story