காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் தற்கொலை மிரட்டல் சரியல்ல தேவேகவுடா பேட்டி


காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் தற்கொலை மிரட்டல் சரியல்ல தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 30 March 2018 3:00 AM IST (Updated: 30 March 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்று தமிழ்நாட்டு எம்.பி.க்கள் மிரட்டுவது சரியல்ல என்று தேவேகவுடா கூறினார்.

ஹாசன்,

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்று தமிழ்நாட்டு எம்.பி.க்கள் மிரட்டுவது சரியல்ல என்று தேவேகவுடா கூறினார்.

கர்நாடகத்திற்கு சாதகமான ஒன்று

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா நேற்று காலையில் ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை கண்டிப்பாக அமைத்தே தீர வேண்டும் என்றும், இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் தமிழ்நாட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள். இதில் யாரும் கோபமோ, ஆத்திரமோ பட வேண்டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று மத்திய அரசு கூறி வருகிறது. இது கர்நாடகத்திற்கு சாதகமான ஒன்று. மத்திய அரசும், கர்நாடக அரசும் யாருடைய அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது என்பது இதன்மூலம் நன்றாக தெரிகிறது.

காவிரி பிரச்சினை

காவிரி பிரச்சினையை தீர்ப்பது எளிதான காரியம் அல்ல. இப்பிரச்சினை தொடர்பாக கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில முதல்-மந்திரிகள் ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை குறித்து நன்கு அறிந்தவர்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள், மத்திய நீர்வளத்துறை மந்திரி ஆகியோர் பங்கேற்க வேண்டும்.

அந்த கூட்டத்தில் தற்போது அணைகளில் உள்ள நீரின் அளவு, 4 மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீரின் அளவு, அடுத்த 5 ஆண்டுகளில் நீரை ஆதாரமாக வைத்து 4 மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் இப்படி பல்வேறு அம்சங்கள், சாதக-பாதகங்கள் ஆகியவை குறித்து ஆராய்ந்து பேச வேண்டும். அதன்பிறகு ஒரு சுமுக முடிவுக்கு வரவேண்டும்.

மக்கள் ஒன்றாக வாழ வேண்டும்

அதை எல்லாம் விட்டுவிட்டு கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் தரவில்லை என்றாலோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றாலோ தற்கொலை செய்து கொள்வோம் என்று தமிழ்நாட்டு எம்.பி.க்கள் மிரட்டுவது சரியல்ல. நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை மறந்து ஒன்றாக வாழ வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

பா.ஜனதா கட்சியின் ‘பீ-டீம்’ என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலர் குறை கூறி வருகிறார்கள். இது தவறு. இது கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடியும் வரை நான் யாரையும் தேவையின்றி குறை கூறமாட்டேன். என்னுடைய கவனம் முழுவதும் தேர்தலை எதிர்கொள்வதில்தான் உள்ளது.

வருகிற 2-ந் தேதி மாநாடு


தற்போது சிக்கமகளூரு, குடகு, ஹாசன் மாவட்டங்களில் உள்ள பாக்கு விவசாயிகள் குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள். இதுநாள் வரையில் அவர்களுக்கு பாக்கு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தெரியாதா?. தேர்தல் நேரத்தில் மட்டும் ஏன்? அவர்கள் பாக்கு விவசாயிகளைப் பற்றி பேசுகிறார்கள்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தலையொட்டி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மும்பை கர்நாடகம், ஐதராபாத் கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார்.

வருகிற 2-ந் தேதி ஹாசனில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் பெரிய அளவில் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

Next Story