மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் இன்று நடக்கிறது


மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 30 March 2018 4:00 AM IST (Updated: 30 March 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றம் நடக்கிறது.

உடுமலை,

உடுமலையில் சக்திவாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 20-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 27-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.

இன்று(வெள்ளிக்கிழமை) தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் பகல் 12.30 மணிக்கு நடக்கிறது. விழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக் கிறது.

அதன்படி இன்று காமதேனு வாகனத்திலும், நாளை (சனிக்கிழமை) யானை வாகனத்திலும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ரிஷப வாகனத்திலும், 2-ந்தேதி அன்ன வாகனத்திலும், 3-ந் தேதி சிம்ம வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். 4-ந்தேதி மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், அன்று இரவு 8 மணிக்கு மயில் வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந்தேதி மாலை 4.15 மணிக்கு நடக்கிறது.

இதைத்தொடர்ந்து 6-ந்தேதி காலை 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், மாலை 4 மணிக்கு ஸ்ரீலலிதா திரிசதி அர்ச்சனையும், அன்று இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், இரவு 10 மணிக்கு குட்டைத்திடலில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் 7-ந்தேதி காலை 10.30 மணிக்கு கொடியிறக்கப்படுகிறது. பின்னர் காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், 12 மணிக்கு மஞ்சள் நீராட்டும், இரவு 7 மணிக்கு புஷ்பபல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.

இதற்கிடையே தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரின் சக்கரங்களுக்கு வர்ணம் பூசும் பணி நேற்று நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் ஆர்.சங்கரசுந்தரேஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்துவருகிறார்கள்.

Next Story